
சங்கீதம் 132
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
அத்தியாய சுருக்கம்
சங்கீதம் 132 தாவீதின் பக்தியையும், பெட்டியின் ஓய்விடத்தையும், சீயோன், ஆசாரிய பதவி, ஏற்பாடு, நீடித்த அரசாட்சியை இணைக்கும் வாக்குறுதிகளையும் நினைவுகூர்கிறது. வழிபாட்டு ஊர்வலம் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியிருப்பு ஏழையையும் உண்மையுள்ளவர்களையும் ஆசீர்வதிக்கும் என்ற நம்பிக்கையாக மாறுகிறது.
பெட்டிசீயோன்அரசாட்சிஉடன்படிக்கை
1யெகோவாவே, தாவீதையும் அவன் சகித்துக்கொண்ட எல்லாத் துன்பங்களையும் நினைவிற்கொள்ளும்.
2அவன் யெகோவாவுக்குச் சத்தியத்தை ஆணையிட்டு, யாக்கோபின் வல்லவருக்கு இப்படி ஒரு நேர்த்திக்கடன் செய்தான்:
3“நான் என் வீட்டிற்குள் நுழையமாட்டேன், என் படுக்கைக்குப் போகவுமாட்டேன்.
4என் கண்களுக்கு நித்திரையையும், கண்ணிமைகளுக்கு தூக்கத்தையும் வரவிடமாட்டேன்.
5யெகோவாவுக்காக ஒரு இடத்தை, யாக்கோபின் வல்லவராகிய இறைவனுக்காக ஒரு வாழ்விடத்தைக் கட்டும்வரை இவற்றைச் செய்யமாட்டேன்.”
6எப்பிராத்தாவிலே நாம் அதைக் கேள்விப்பட்டு, யாரீமின் வயல்வெளிகளில் நாம் அதைக் கண்டோம்:
7“நாம் அவருடைய வாழ்விடத்திற்குப் போவோம், அவருடைய பாதபடியில் வழிபடுவோம்.
8‘யெகோவாவே, எழுந்து உமது வாழ்விடத்திற்கு வாரும், உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் வாரும்.
9உம்முடைய ஆசாரியர்கள் நீதியை உடுத்திக்கொள்ளட்டும்; உமது பரிசுத்தவான்கள் மகிழ்ச்சியுடன் பாடட்டும்.’ ”
10உமது அடியவனாகிய தாவீதின் நிமித்தம், நீர் அபிஷேகித்தவரை புறக்கணியாதேயும்.
11யெகோவா தாவீதுக்கு ஒரு சத்தியத்தை ஆணையிட்டார்; அது நிச்சயமான வாக்கு; அவர் இதை நிறைவேற்றாமல் விடமாட்டார்: “உன்னுடைய சொந்த சந்ததியில் ஒருவனை நான் உன் சிங்காசனத்தில் அமர்த்துவேன்.
12உன் மகன்கள் என் உடன்படிக்கையையும், நான் அவர்களுக்குப் போதிக்கிற நியமங்களையும் கைக்கொள்வார்களானால், அவர்களுடைய மகன்களும் என்றென்றும் உன் சிங்காசனத்தில் அமருவார்கள்.”
13யெகோவா சீயோனைத் தெரிந்துகொண்டார்; அவர் அதையே தமது இருப்பிடமாக்க விரும்பியிருக்கிறார்:
14“இது என்றென்றைக்கும் நான் தங்குமிடம்; இவ்விடத்தை நான் விரும்பியிருக்கிறபடியால், இங்கேயே நான் சிங்காசனத்தில் அமர்ந்திருப்பேன்.
15நான் சீயோனை ஏராளமான உணவுப் பொருட்களால் ஆசீர்வதிப்பேன்; அங்குள்ள ஏழைகளை உணவினால் திருப்தியாக்குவேன்.
16அங்குள்ள ஆசாரியருக்கு நான் இரட்சிப்பை உடுத்துவேன்; அங்குள்ள பரிசுத்தவான்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் பாடுவார்கள்.
17“இங்கே தாவீதுக்காக, ஒரு வல்லமையுள்ள அரசனை வளரப்பண்ணுவேன்; நான் அபிஷேகம் செய்தவனுக்காக, ஒரு விளக்கையும் ஏற்படுத்துவேன்.
18அவனுடைய பகைவரை வெட்கத்தால் உடுத்துவேன்; ஆனால் அவனுடைய தலையின் கிரீடமோ பிரகாசிக்கும்.”
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.