
சங்கீதம் 64
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
அத்தியாய சுருக்கம்
சங்கீதம் 64 ரகசிய சூழ்ச்சிகளிலிருந்தும் அம்பு போல கூர்மையாக்கப்பட்ட கொடூர பேச்சிலிருந்தும் பாதுகாப்பைக் கேட்கிறது. தீயவர்கள் தங்கள் பொறிகள் காணப்படாது என்று கருதுகிறார்கள், ஆனால் நீதி வரும்போது அவர்களது சொந்த வார்த்தைகள் அவர்களை வெளிப்படுத்துகின்றன, நேர்மையானவர்கள் மகிழ்ந்து அடைக்கலம் பெறுகிறார்கள்.
பாதுகாப்புநீதிசூழ்ச்சிஅடைக்கலம்
1இறைவனே, நான் முறையிடும் என் குரலுக்குச் செவிகொடும்; பகைவனின் பயமுறுத்தலிலிருந்து என் உயிரைப் பாதுகாத்துக்கொள்ளும்.
2கொடியவர்களின் சதியிலிருந்தும், ஆரவாரிக்கும் தீயவர்களின் கூட்டத்திலிருந்தும் என்னை மறைத்துக்கொள்ளும்.
3அவர்கள் தங்களுடைய நாவுகளை வாள்களைப்போல் கூராக்குகிறார்கள்; தங்கள் சொற்களைப் பயங்கரமான அம்புகளைப்போல் எய்கிறார்கள்.
4அவர்கள் மறைவிலிருந்து குற்றமற்றவன்மேல் எய்கிறார்கள்; அவர்கள் பயமின்றி திடீரென அவன்மேல் எய்கிறார்கள்.
5தீமையான திட்டமிடுவதில் அவர்கள் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துகிறார்கள்; தங்கள் கண்ணிகளை மறைத்து வைப்பதுபற்றி பேசிக்கொள்கிறார்கள்; “நாம் என்ன செய்கிறோம் என்பதை யார் காணுவார்கள்?” என்கிறார்கள்.
6அவர்கள் அநீதி செய்ய சதிசெய்து, “நாங்கள் ஒரு சிறந்த திட்டத்தை வகுத்துள்ளோம்!” என்கிறார்கள். நிச்சயமாகவே மனிதனின் மனமும் இருதயமும் ஆழமானவை.
7ஆனால் இறைவன் அவர்களை அம்புகளால் எய்து தாக்குவார்; உடனே அவர்கள் அடித்து வீழ்த்தப்படுவார்கள்.
8இறைவன் அவர்களுடைய நாவுகளையே அவர்களுக்கெதிராக திரும்பப்பண்ணி, அவர்களை அழிவுக்குள்ளாக்குவார்; அவர்களைப் பார்ப்போர் அனைவரும் தங்கள் தலைகளை அசைத்துக் கேலி செய்வார்கள்.
9எல்லா மனிதரும் பயப்படுவார்கள்; இறைவனின் செயல்களை அவர்கள் அறிவித்து, அவர் செய்தவற்றைப்பற்றி சிந்திப்பார்கள்.
10நீதிமான்கள் யெகோவாவிடம் மகிழ்ந்து, அவரிடத்தில் தஞ்சம் அடைவார்கள்; இருதயத்தில் நீதியுள்ளோர் அனைவரும் அவரைப் புகழ்வார்கள்!
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.