
சங்கீதம் 30
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
அத்தியாய சுருக்கம்
சங்கீதம் 30 கடுமையான நோயிலிருந்தும் ஆபத்திலிருந்தும் மீட்டமைப்பிற்காக நன்றி செலுத்துகிறது. இரவு முழுவதும் அழுகை காலை மகிழ்ச்சிக்கு வழிவிடுகிறது, சுய நம்பிக்கை திருத்தப்படுகிறது, துக்கம் நடனமாக மாறுகிறது, புதுப்பிக்கப்பட்ட வாழ்க்கை நன்றியுள்ள துதியில் அமைதியை மறுக்கிறது.
குணமாதல்மகிழ்ச்சிதுக்கம்நன்றியுணர்வு
1யெகோவாவே, உம்மை நான் புகழ்ந்து உயர்த்துவேன், ஏனெனில், ஆழங்களிலிருந்து நீர் என்னை வெளியே தூக்கியெடுத்தீர்; என் பகைவர் என்னைப் பழித்து மகிழ நீர் இடமளிக்கவில்லை.
2என் இறைவனாகிய யெகோவாவே, உதவிவேண்டி உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; நீர் என்னை சுகமாக்கினீர்.
3யெகோவாவே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து மேலே கொண்டுவந்தீர்; குழிக்குள் போய்விடாமல் என்னைத் தப்புவித்தீர்.
4யெகோவாவினுடைய பரிசுத்தவான்களே, நீங்கள் அவருக்குத் துதி பாடுங்கள்; அவருடைய பரிசுத்தத்தை நினைத்து நன்றி கூறுங்கள்.
5அவருடைய கோபம் ஒரு விநாடி மட்டுமே, ஆனால் அவருடைய தயவோ வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும்; இரவிலே அழுகை இருந்தாலும், காலையிலோ மகிழ்ச்சி வரும்.
6நான் பாதுகாப்பாய் இருக்கிறேன் என எண்ணியபோது, “நான் ஒருபோதும் அசைக்கப்படமாட்டேன்” என்று சொன்னேன்.
7யெகோவாவே, நீர் எனக்குத் தயை காண்பித்தபோது, என்னுடைய மலையை உறுதியாய் நிற்கப்பண்ணினீர்; ஆனால் நீர் உமது முகத்தை மறைத்துக்கொண்ட போது, நான் மனம்சோர்ந்து போனேன்.
8யெகோவாவே, நான் உம்மையே நோக்கிக் கூப்பிட்டேன்; யெகோவாவிடம் நான் இரக்கத்திற்காகக் கதறினேன்.
9“நான் அழிந்து குழிக்குள் போவதால் என்ன பயன்? தூசி உம்மைத் துதிக்குமோ? அது உமது உண்மையை பிரசித்தப்படுத்துமோ?
10யெகோவாவே, எனக்குச் செவிகொடும்; என்மேல் இரக்கமாயிரும். யெகோவாவே, எனக்கு உதவியாயிரும்.”
11என் கதறலை ஆனந்தக் களிப்பாய் மாற்றினீர்; நீர் என்னுடைய துக்கவுடையைக் களைந்துவிட்டு, மகிழ்ச்சியினால் என்னை உடுத்துவித்தீர்.
12ஆதலால் என் இருதயம் மவுனமாயிராமல், உமது துதியைப் பாடிக்கொண்டே இருக்கும்; என் இறைவனாகிய யெகோவாவே, என்றென்றைக்கும் நான் உம்மைத் துதிப்பேன்.
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.