A family shelters behind rock as elders reveal pits, ropes, weapons, and distant plotters

சங்கீதம் 140

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
அத்தியாய சுருக்கம்
சங்கீதம் 140 பேச்சு, பொறிகள், திட்டங்கள் பாதிக்கப்படக்கூடியவர்களை ஆபத்தில் ஆழ்த்தும் வன்முறை சூழ்ச்சிக்காரர்களிடமிருந்து மீட்பைக் கேட்கிறது. தீங்கிழைக்கும் தந்திரோபாயங்கள் திரும்பி வரும் என்றும், நீதி ஏழைகளையும் தேவையுள்ளவர்களையும் பாதுகாக்கும் என்றும் ஜெபம் நம்புகிறது.
பாதுகாப்புவன்முறைநீதிஏழை
1யெகோவாவே, தீய மனிதரிடமிருந்து என்னைத் தப்புவியும்; வன்முறையாளர்களிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
2அவர்கள் தங்கள் இருதயங்களில் பொல்லாத திட்டங்களைத் தீட்டி, நாள்தோறும் போரை மூட்டிவிடுகிறார்கள்.
3அவர்கள் தங்கள் நாவுகளைப் பாம்பின் நாவுகளைப் போலக் கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளில் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது.
4யெகோவாவே, கொடியவர்களுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி, வன்முறையாளர்களுக்கு என்னை விலக்கி இரட்சியும்; அவர்கள் என் நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள்.
5பெருமையுள்ள மனிதர்கள் எனக்குக் கண்ணியை மறைத்து வைத்திருக்கிறார்கள்; அவர்கள் தங்கள் வலைகளின் கயிறுகளை விரித்து, என் வழியெல்லாம் எனக்காகக் பொறிகளை வைத்திருக்கிறார்கள்.
6யெகோவாவே, “நீரே என் இறைவன்” என்று நான் உம்மிடம் சொல்கிறேன்; யெகோவாவே, இரக்கத்திற்கான என் கதறுதலைக் கேளும்.
7ஆண்டவராகிய யெகோவாவே, என் இரட்சிப்பின் பெலனே, நீர் யுத்தநாளில் என் தலையை மறைத்துகொள்ளும்.
8யெகோவாவே, கொடியவர்களின் ஆசைகள் நிறைவேற விடாதேயும்; அவர்களுடைய திட்டங்களை வெற்றியடைய விடாதேயும்.
9என்னைச் சூழ்ந்துள்ளவர்கள் பெருமையுடன் தங்கள் தலையை உயர்த்துகிறார்கள்; அவர்கள் உதடுகளின் தீவினைகள் அவர்களை மூடும்.
10எரியும் நெருப்புத் தழல்கள் அவர்கள்மேல் விழட்டும்; அவர்கள் ஒருபோதும் எழுந்திருக்க முடியாதபடி நெருப்பிலும், சேற்றுக் குழிகளிலும் தள்ளப்படட்டும்.
11அவதூறு பேசுகிறவர்கள் நாட்டில் நிலைபெறாதிருக்கட்டும்; வன்முறையாளர்களை பேராபத்து வேட்டையாடி வீழ்த்தட்டும்.
12யெகோவா ஏழைகளுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கிறவர் என்பதையும், எளியவர்களின் சார்பாக வழக்காடுபவர் என்பதையும் நான் அறிவேன்.
13நிச்சயமாகவே, நீதிமான்கள் உமது பெயரைத் துதிப்பார்கள்; நேர்மையுள்ளவர்கள் உமது சமுகத்தில் வாழ்வடைவார்கள்.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.