
யாக்கோபு 3
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
அத்தியாய சுருக்கம்
நாக்கு சிறியதாக இருந்தாலும் வழிநடத்தவோ அழிக்கவோ முடியும் என்பதால் போதகர்கள் சிறப்பு பொறுப்பை சுமக்கிறார்கள். யாக்கோபு கசப்பான, லட்சிய பேச்சை மேலிருந்து வரும் ஞானத்துடன் ஒப்பிடுகிறார், அது தூய்மையானது, சமாதானமானது, மென்மையானது, இரக்கமுள்ளது, நேர்மையானது, நீதியை உற்பத்தி செய்யக்கூடியது.
பேச்சுகற்பித்தல்ஞானம்சமாதானம் செய்தல்
1என் சகோதரரே, உங்களில் பலர் போதகர்கள் ஆவதற்கு விரும்பாதீர்கள். ஏனெனில் போதிக்கிற நாம் அதிக தீர்ப்பிற்கு உட்படுவோம் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.
2நாம் எல்லோரும் பலவிதங்களில் தவறு செய்கிறோம். தன் பேச்சில் ஒருபோதும் தவறாதவனாக யாராவது இருந்தால், அவனே முழுநிறைவு பெற்ற மனிதன். இப்படிப்பட்டவன், தனது முழு உடலையும் அடக்கி ஆளும் ஆற்றல் உடையவன்.
3குதிரைகள் நமக்குக் கீழ்ப்படியும்படி, அவைகளுடைய வாய்களில் கடிவாளங்களைப் போடும்போது, அவைகளின் முழு உடலையும் நாம் கட்டுப்படுத்துகிறோம்.
4அல்லது கப்பல்களை ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். அவை மிகப்பெரியவைகளாய் இருந்தும், பலத்த காற்றினாலேயே அடித்துச் செல்லப்பட்டாலும், கப்பலின் மாலுமி தான் விரும்புகின்ற திசையை நோக்கி, ஒரு சிறு சுக்கானாலே அவற்றைத் திருப்புகிறான்.
5அதேபோலவே, நாவும் உடலின் ஒரு சிறு அங்கமாயிருக்கிறது; ஆனால் அது பெரும் அளவில் பெருமை பேசுகிறது. ஒரு சிறு நெருப்புப் பொறி எவ்வளவு பெரிய காட்டையும் எரித்துவிடுகிறது என்பதை எண்ணிப்பாருங்கள்.
6நாவும் நெருப்பாக இருக்கிறது. நமது உடலின் அங்கங்களுக்குள்ளே, நாவு ஒரு தீமை நிறைந்த உலகம் என்றே சொல்லலாம். அது ஒருவனை முழுவதுமாகவே சீர்கெடுத்து, அவனுடைய வாழ்க்கை முழுவதையும் எரியும் நெருப்பாக்கி விடுகிறது. அதுவும் நரகத்தின் நெருப்பினால் மூட்டப்படுகிறது.
7எல்லா விதமான மிருகங்களும், பறவைகளும், ஊரும் பிராணிகளும், கடலில் வாழும் உயிரினங்களும் மனிதனால் அடக்கிக் கட்டுப்படுத்தப்படுகின்றன. அப்படிக் கட்டுப்படுத்தப்பட்டும் இருக்கின்றன.
8ஆனால் நாவையோ ஒருவனாலும் அடக்கிக் கட்டுப்படுத்த முடியாது. அது கட்டுக்கடங்காத கொடியது. மரணத்தை விளைவிக்கும் விஷம் நிறைந்ததாயிருக்கிறது.
9நாம் நாவினாலே நமது கர்த்தரையும், பிதாவையும் துதிக்கிறோம். அதே நாவினாலேயே இறைவனுடைய சாயலாக படைக்கப்பட்ட மனிதர்களைச் சபிக்கிறோம்.
10ஒரே வாயிலிருந்து துதியும், சாபமும் வருகிறது. எனக்கு பிரியமானவர்களே, இவ்விதமாய் இருக்கக்கூடாதே.
11ஒரே ஊற்றிலிருந்து நல்ல தண்ணீரும் உப்புத் தண்ணீரும் சுரக்க முடியுமா?
12எனக்கு பிரியமானவர்களே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சைக்கொடி அத்திப்பழங்களையும் விளைவிக்குமா? அதேபோல், உப்புத் தண்ணீர் ஊற்றிலிருந்து நல்ல தண்ணீர் வருவதுமில்லை.
13உங்களுக்குள்ளே ஞானம் உள்ளவன் யார்? அறிவுள்ளவன் யார்? அவன் தன்னுடைய நல்ல வாழ்க்கையினாலே அதைக் காண்பிக்கட்டும். ஞானத்திலிருந்து வரும் மனத்தாழ்மையினால் செயல்களைச் செய்து காண்பிக்கட்டும்;
14ஆனால், உங்களுடைய இருதயங்களிலே கசப்பான பொறாமையையும், சுயநல ஆசையையும் இருக்குமேயானால், அதைக்குறித்து பெருமைப்பட வேண்டாம், சத்தியத்திற்கு எதிராக பொய் பேசவேண்டாம்.
15அப்படிப்பட்ட ஞானம் பரலோகத்திலிருந்து வரும் ஒன்றல்ல; இது உலக ஞானம். இது ஆவிக்குரிய தன்மையற்றது. இது பிசாசினிடத்திலிருந்து வருகிறது.
16ஏனெனில் எங்கே பொறாமையும் சுயநல ஆசையும் இருக்கின்றதோ, அங்கே ஒழுங்கீனமும் எல்லாவிதத் தீயசெயல்களும் இருக்கின்றன.
17ஆனால் பரலோகத்திலிருந்து வருகிற ஞானமோ, முதலாவது தூய்மை உடையதாய் இருக்கிறது; அது சமாதானத்தை விரும்புகிறதும், தயவுடையதும், பணிவுடையதும், இரக்கம் நிறைந்ததும், நல்ல கனியினால் நிறைந்ததுமாய் இருக்கிறது; அது பாரபட்சமும் போலித்தன்மையற்றதுமாய் இருக்கிறது.
18சமாதானத்தை உண்டுபண்ணுகிறவர்கள் சமாதானத்தின் விதையை விதைத்து, நீதியை அறுவடை செய்கிறார்கள்.
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.